திங்கள், 17 நவம்பர், 2008

ஆண்டவனுக்காக ரஜினி காத்திருக்க வேண்டும்

70 ஆண்டுகளின் உழைப்பை ‘என் தேசம்.. என் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்திற்குள் அடக்கியிருக்கிறார் அத்வானி. அதன் வெளியீட்டு விழா சென்னையில் அரங்கேறியது. ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தக்கத்தின் தமிழக்கம்தான் ‘என் தேசம்.. என் வாழ்க்கை’
அறிவு ஜீவிகளால் நாரதகான சபை நிரம்பி வழிந்திருந்தது. கூடவே காவி கட்சிக்காரர்கள். வி.ஐ.பி.கள் வரும் போததெல்லாம் கைதட்டி ஆராவரம் செய்து கொண்டிருந்தார்கள். சோ வந்த போது சினிமா ரசிகர்கள் போல விசில் சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது. போயஸ் கார்டனில் ரஜினி வீட்டுக்கு விசிட் அடித்த கையோடு ஆடிட்டோரியத்திற்கு வந்தார் அத்வானி. ‘பாரத் மாதாகீ ஜே’ என்ற கோஷம் அடங்க ரொம்ப நேரமானது. அடுத்த சில நிமிடங்களில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் என்ட்ரி கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அவருக்கும் விசில்தான். மேடையின் எதிரே முன்வரிசையில் நிறைய வி.ஐ.பி.கள் அமர்ந்திருக்க அதற்கு முன்பாக ஒரு இருக்கையை போட்டு ரஜினியை அமரவைத்தார்கள். அவருக்கு பக்கத்திலேயே திருநாவுக்கரசர் உட்கார்ந்து கொண்டார். கொஞ்சம் நேரத்திலேயே என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை முன்வரிசையில் ரஜினிக்கு பக்கத்தில் அமர வைத்தார். அந்த பெண்மணி அத்வானியின் மகள் பிரதீபா.
‘‘அத்வானி எழுதிய ஆங்கில புத்தகத்தின் தமிழகத்தை வெளியிட நான் விரும்பிய போது உடனே அதற்கான அனுமதியை வாங்கிக் கொடுத்தவர் சோ. அதனால் அவருக்கு தமிழ் உணர்வு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சீக்கிரமே மோடியின் புத்தகத்தை தமிழில் வெளியிடப்போகிறோம்.’’ என்றார்‘அல்லையன்ஸ்’ பதிப்பகத்தின் சீனிவாசன். புத்தகத்தை வெளியிட்ட பிறகு அதனை வி.ஐ.பி.கள் சிலருக்கு வழங்கினார் அத்வானி. முதல் புத்தகத்தை வாங்க கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மேடையேறிய போது அத்வானி காலில் விழ அவரை கட்டித் தழுவிக்கொண்டார் அத்வானி. மேடையில் அத்வானியின் பக்கத்திலேயே அவரது மனைவி கமலாவும் அமர வைக்கப்பட்டிருந்தார். அவர் காலிலும் விழ ஸ்ரீகாந்த் தவறவில்லை. அடுத்து ‘இந்து’ ராமுக்கு புத்தகம் கொடுத்தார் அத்வானி. புத்தகம் வாங்கிய கையோடு இந்து ராம் கிளம்பி போக உடனே சோ மைக் பிடித்து ‘‘இந்து ராம் பேச வேண்டும்.’’ என்று அவரை மைக் முன்பு வந்து இழுத்துப்போட்டார். நடிகை மனோரமா மேடையேறி நின்றதும் அவருக்கு புத்தகத்தை கொடுக்காமல் நின்றுகொண்டிருந்தார் அத்வானி. புத்தகம் தருவார் என்று ஆச்சியும் அவரை பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசியில் அத்வானி காதில் வந்து ஒருவர் சொன்ன பிறகுதான் புத்தகத்தை ஆச்சிக்கு கொடுத்தார் அத்வானி. காரணம் மைக்கில் தமிழில் அறிவிக்கப்பட்டதால் அத்வானிக்கு அது புரியவில்லை. ரஜினி அழைக்கப்பட்ட போது பெரிய கும்பிடு போட்டபடியே புத்தகத்தை வாங்கிவிட்டு அதை தூக்கிப்பிடித்து போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு கீழே இறங்கி போய் அமர்ந்துகொண்டார்.
‘‘அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்’’ இப்படி வெள்ளோட்டம் கொடுத்து சோவை அழைத்தார் தொகுப்பாளர் சுமதி. ‘‘முக்கியமான சில விஷயங்களை மட்டும் நான் ஆங்கிலத்தில் பேசப்போவதில்லை. காரணம் அத்வானிக்கு புரியக்கூடாது என்பதற்காக. சிலரை பார்த்தலே தெரிந்துவிடும் இவர் சாதிக்க கூடியவர் என்று. அத்தகைய தன்மைகளை பெற்றிருக்கிறார் அத்வானி. ஆட்டிப்படைக்க கூடிய இடத்திற்கு வருவார். ஆனால் அவர் பிரதமர் ஆவதை நினைக்கும் போது எனக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. இங்கே ராஜினாமா கோஷம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது. ‘அத்வானி ராஜினாமா’ என்றால் உடனே அவர் தனது பதவியை உண்மையிலேயே ராஜினாமா செய்வார். ராஜினாமா என்பது என்ன பதவியை விட்டு போவது ஆனால் இங்கே பதவியில் தொடர வேண்டும் என்பதுதான் ராஜினாமாவுக்கான இலக்கணமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த போதுகூட அதன் செயல்பாட்டை விமர்சனம் செய்யும் ஆற்றல் படைத்தவர் அத்வானி. இன்றைக்கு அரசியலில் நேர்மையான ஆள் ஒருவர் இருக்கிறார் என்று பட்டியல் போட்டால் அதில் அத்வானி நம்பர் 1 இருப்பார். அரசியல்வாதிகள் தன்னை தவிர வேறு யாரையும் வளரவிடுவதில்லை. காரணம் நாளைக்கு அவர்களாலேயே தன் பதவிக்கு ஆபத்து வரும் என்ற பயம்தான். ஆனால் அத்வானிக்கு அந்த பலம் இருக்கிறது. அதனால்தான் மோடியை வளர்க்க முடிகிறது. ‘என் தேசம் என் வாழ்க்கை’ என்று அத்வானியால் எழுத முடிகிறது. ஆனால் மற்றவர்கள் அப்படி எழுத முடியுமா? ‘என் தேசம் என் குடும்பம்’ என்றால்தான் அவர்களுக்கு புரியும்.
மைனாரிட்டி மக்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு விமோசனம். அவர்கள் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இலங்கை விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் இதுதான் விஷயம் என்று இங்கே இருக்கும் அரசியல்வாதிகளால் சொல்ல முடியுமா? இதில் அவர்களுக்கு தெளிவான முடிவு இருப்பதில்லை. இதுதான் சரி என்று சொல்ல கூடிய ஆற்றல் உறுதிபாடு அத்வானிக்கு மட்டுமே உண்டு. அடுத்து ஜெயலலிதாவுக்கு உண்டு. தீவிரவாதத்திற்கு எதிராக அவர் எடுக்கும் ஸ்டாண்ட் வேறு யாருக்குமே இருப்பதில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக ஜெயலலிதா பேச பேச அதை பார்த்து பாலோ செய்து காங்கிரஸுக்கும் கொஞ்சம் தைரியம் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயலலிதா அறிக்கை கொடுத்தால் அதில் என்ன இருக்கிறது என்பது தெளிவாக புரியும். கலைஞர் அறிக்கையில் அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கே புரியாது. அதனால்தான் சொல்கிறேன் ஜெயலலிதாவும் அத்வானியும் ஒன்றாக நின்றால் நல்லது நடக்கும். இரண்டு கட்சிகளுமே இயற்கையாக அமைந்த கூட்டணி. இன்னும் காலம் இருக்கிறது. நல்லது நடக்கும் என்று நினைப்போம்.’’ என்றார் சோ. பேசி முடித்துவிட்டு கிளம்பியவர் திரும்பி வந்து ‘‘சுமதி ஒரு கிரிமினல்.. சாரி கிரிமினல் லாயர்’’ என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு போய் அமர்ந்தார்.
சோ பேச ஆரம்பித்த நேரத்தில் ''இங்கே ரஜினி ரசிகர்கள் யாரும் இல்லை. பொதுவான மக்கள்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போதே ரஜினிக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது. இன்னும் ஏன் அவர் ஆண்டவனை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்." என்று பஞ்ச வைத்தார்.அதன் பிறகு அத்வானி பேசியது பத்திரிகைகளில் வந்துவிட்டதால் அதன் பிறகு எந்த சுவாரசியமும் இல்லை என்பதால் கட்டுரையை இதோடு முடித்து கொள்கிறேன்.
அத்வானி எழுதிய இந்த புத்தகத்தை தமிழில் டி.டி.பி செய்தவர் முஹம்மது ஆசாத். அலையன்ஸ் பதிப்பகத்தால் நடந்த்தபட்ட விழாவில் தேர்தல் அலையன்ஸ் பற்றிய பேச்சுதான் பிரதானமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக