சனி, 22 நவம்பர், 2008

சட்டக் கல்லூரி மோதல் தொடரும் விசாரணை கமிஷன்கள்


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அரங்கேறிய மோதலின் ஆணிவேரைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் விசாரண கமிஷன் அமைத்திருக்கிறது தமிழக அரசு. இது, இதே சட்டக் கல்லூரி விவகாரங்களுக்காக அமைக்கப்பட்ட நான்காவது விசாரணை கமிஷன் என்பதுதான் கொடுமை!

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏற்கெனவே நடந்த மோதல்கள் தொடர்பாக பன்னிரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புரசைவாக்கத்தில் இருக்கும் சட்டக் கல்லூரி விடுதியில் நடந்த மோதல் தொடர்பாக எட்டு வழக்குகள் என மொத்தம் 20 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களால் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். 1968ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் ஏற்பட்ட கலவரத்துக்காக மறைந்த நீதிபதி சோமசுந்தரம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன்பிறகு 1981ம் ஆண்டு பெரிதாக நடந்த மோதலுக்காக ஓய்வுபெற்ற நீதியரசர் காதர் தலைமையில் கமிஷன் நியமிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2001ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, விடுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்காக நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த வரிசையில்தான் இப்போது நடந்த சம்பவங்களுக்கு நீதிபதி பி.சண்முகம் கமிஷன் அமைத்திருக்கிறார்கள்.2001ம் ஆண்டு சட்டக் கல்லூரி விடுதியில் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட கே.எஸ்.பக்தவத்சலம் கமிஷன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்தது. ‘பொறுப்பு வகிக்கும் அதிகாரி கண்டிப்பான ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும், தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உரிமை வழங்கவேண்டும். மாணவர் விடுதியிலேயே ஒரு குடியிருப்பு கட்டி காப்பாளர் அங்கே தங்க வழிவகை செய்யவேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகளை அரசு ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், அரசுக்கு இப்போது வேறு வழி தெரியவில்லை. எந்த ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன... பிரச்னையை ஆறப்போட ஒரு கமிஷனைப் போடுவதுதான் லேட்டஸ்ட் கலாசாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் நெரிசலில் இறந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பரிந்துரைகளை ஏற்க முடியாது என்று சாதாரணமாக அறிவித்துவிட்டது அரசு. இப்போது அமைக்கப்பட்ட கமிஷனாலும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுத்தாலே பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்கிற கருத்து மேலோங்கி இருக்கிறது.

‘சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறைச் சம்பவத்துக்குத் தூண்டுதலாக இருந்த சூழ்நிலை எது? அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன்விரோதம் நிலவுகிறது என்ற தகவல், அந்தக் கல்லூரியின் முதல்வருக்கு ஏற்கெனவே தெரியுமா? அப்படித் தெரிந்திருந்தால் அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?’ என்பதை எல்லாம் இப்போது அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் கமிஷன் விசாரிக்கச் சொல்லி அரசு உத்தரவு போட்டிருக்கிறது. 2001ம் ஆண்டு சட்டக் கல்லூரி விடுதியில் நடந்த மோதலின்போது துணை வார்டனாக இருந்த ஸ்ரீதேவ்தான் இப்போது நடந்த சம்பவத்தின்போதும் பொறுப்பு முதல்வராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 2001 விடுதிச் சம்பவம் தொடர்பாக பக்தவத்சலம் கமிஷனில் தானாக வந்து முறையீடுகளைத் தாக்கல் செய்யவில்லை. அவர் உட்பட விடுதித் தரப்பு பொறுப்பாளர்களுக்கு கமிஷனே அழைப்பாணைகளை அனுப்பி விசாரித்தது. இப்போது நடந்த சம்பவத்துக்கு ஸ்ரீதேவே பிரதானமாக விமர்சிக்கப்படுகிறார். அவர் போலீஸை அழைத்தாரா, அழைக்கவில்லையா என்பது விசாரணை அறிக்கையில்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக