திங்கள், 24 நவம்பர், 2008

மர்மமிகு அம்மாவுக்கே வெளிச்சம்!

விநோதமான அறிக்கைகளை, யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளயிடுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான். லேட்டஸ்டாக ஓர் அறிக்கையில், ‘அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் தலைமையேற்கும் தலைமைக் கழக நிர்வாகி, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர்,முக்கிய நிர்வாகிகள் ஆகியோருக்குப் புகழாரம் சூட்டுகிற பேச்சுகளைத்தான் அதிகமாகக் கேட்க முடிகிறது. இது விரும்பத்தகாத செயல். அ.தி.மு.க. அரசின் முந்தைய சாதனைகளையும் தி.மு.க. அரசின் அவலங்களையும் மட்டுமே பேசவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ‘இனியும் தனி நபர்களைப் பற்றி யாராவது புகழ்ந்து பேசினால்,அதன் விவரங்களை உடனடியாக எனக்குத் தெரிவிக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.(அப்படி தொடர்பு கொண்டவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கின்றன) இந்த அறிக்கையின் பின்னணி பற்றி பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, இந்த அறிக்கை வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, விழுப்புரம் மாவட்டச் செயலாளராக அமைச்சர் பொன்முடி தேர்வு செய்யப் பட்டதற்காக விழுப்புரம் தி.மு.க. சார்பில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த (ஜெயலலிதாவின் முன்னாள் வக்கீலான) ஜோதி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ‘விழுப்புரத்துக்குள் பொன்முடி நுழையும்போதே பட்டாசுகள், வாணவேடிக்கைகள் என அமர்க்களப்பட்டது. பொன்முடிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்தப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் அ.தி.மு.க.வில் நடந்தால், அடுத்த நிமிடமே அந்த மாவட்டச் செயலாளரை ஜெயலலிதா கட்டம் கட்டிவிடுவார். தி.மு.க.வில் மட்டுமே இப்படி உட்கட்சி ஜனநாயகமும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பாங்கும் இருக்கிறது...’’ என்று ஜோதி பேசினாராம். இந்த விஷயம் ஜெயலலிதா காதுகளுக்குப் போக... ‘ஆமாம். அதிலென்ன சந்தேகம். அ.தி.மு.க. என்பதே ஒன் வுமன் ஷோதான்’ என்று வலியுறுத்துவதுபோல உடனே அறிக்கை வந்துவிட்டது!’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருந்துவரும் அ.தி.மு.க. சீனியர்கள் சிலரிடம் பேசினேன். ‘கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டப் பிரமுகர்களை வாழ்த்திப் பேசுவது எல்லா கட்சியிலும் பின்பற்றப்படும் நடைமுறைதான். இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர். இருந்தபோது இதை உளமார அனுமதித்தார். மாவட்டம், நகரம், ஒன்றியம் என்று எல்லா நிர்வாகிகளின் பெயர்களையும் அவர்களுடைய சாதனைகளையும் சொல்லிப் பேசுவதுதான், அந்தந்த ஏரியாவில் அவர்களின் இமேஜை வளர்த்து... அதன்மூலம் கட்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரே பல மேடைகளில் அடிமட்டத் தொண்டர்கள்வரை பெயர் சொல்லிப் பாராட்டியிருக்கிறார். அவர் முதல்வராக இருந்தபோது, தஞ்சை ஒரத்தநாட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த ராமசாமி என்பவர் மேடையின் கீழே உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர்., அவரை மேடைக்கு அழைத்து ‘பல வருடங்களாகக் கட்சிக்காக இவர் உழைத்துவருகிறார். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும், கட்சி வேலை செய்யக்கூடிய இவரைப் போன்றவர்களால்தான் கட்சி வளர்ந்தது. இப்படிப்பட்டவர்களின் உழைப்பால்தான் இன்று நான் முதல்வர் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்!’ என்று உருக்கமாகப் பேசி, மேடையிலேயே அவரைக் கட்டித் தழுவினார் தலைவர். தலைவரே தன் பெயரைச் சொல்லிப் பாராட்டியதைப் பார்த்து ராமசாமி ஆனந்தத்தில் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார்.
இதே போல இன்னொரு சம்பவம்... எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். திருநெல்வேலியில் இடைத்தேர்தல் நடந்தது. ஆர்.எம்.வீரப்பன் வேட்பாளராக்கப்பட்டார். அங்கே மாவட்டச் செயலாளராக இருந்த கருப்பசாமிபாண்டியனுக்கும் வீரப்பனுக்கும் ஒத்துப் போகவில்லை. இதையறிந்த எம்.ஜி.ஆர். திருநெல்வேலியில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, மேடையில் இரண்டு நாற்காலிகளை மட்டும் போடச் செய்தார். மேடையில், தன்னோடு கருப்பசாமிபாண்டியனை மட்டும் வைத்து, ஆர்.எம்.வீரப்பனை மேடையில் பேச வைத்தார். இப்படி எம்.ஜி.ஆர். தனக்கு அளித்த கௌரவத்துக்காக வீரப்பனோடு இருந்த கசப்புகளையெல்லாம் மறந்து, தேர்தலில் பம்பரமாக சுழன்று வீரப்பனை வெற்றிபெற வைத்தார்! எம்.ஜி.ஆர். இப்படி லோக்கலில் இருப்பவர்களை மதிப்பதன் மூலம் ஈகோ பிரச்னைகள்கூட தீர்ந்திருக்கிறது. ஆனால், வேருக்கு வெந்நீர் ஊற்றும் வேலையைத்தான் இப்போது ஜெயலலிதா செய்துகொண்டிருக்கிறார். கட்சியின் மேலிருக்கும் கொஞ்சநஞ்ச அபிமானம்கூட இதுபோன்ற அறிக்கைகளால் கெட்டுப்போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவருடைய அறிக்கை கீழ்மட்டக் கட்சிக்காரர்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. ஒரு பொதுக்கூட்டத்தை, லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துதான் மாவட்டச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றி நாலு வார்த்தை மேடையில் பேசினால்தானே அவர்களுக்கு மரியாதை..? அவரை ஊருக்குத் தெரியவைத்தால்தானே அவர் கட்சியை வளர்க்கப் பாடுபடுவார்..? அவர்கள் பெயரைச் சொல்லக்கூடாது என்றால், அது என்ன மாதிரியான ஜனநாயகம்..? தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்றுபவர்களுக்குப் பணம் கொடுப்பார்கள். அப்படிப் பணம் கொடுத்தவரை அவர்கள் பாராட்டிப் பேசாமல் இருப்பார்களா..? ஒட்டுமொத்தமாக அடிப்படையையே தகர்க்க நினைக்கிறார் ஜெயலலிதா!’’ என்று சொன்னார்கள்.
பெரியார், அண்ணா காலம் தொட்டு மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்களைப் பாராட்டிப் பேசுவது, திராவிட இயக்கத்தின் நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை அவர்கள் அடையாளம் காட்டத் தவற மாட்டார்கள். 89 91 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் சட்டசபையில் சிறப்பாக செயல்பட்டார்கள். ‘சட்டசபைக் கதாநாயகன் திருநாவுக்கரசர்’, ‘தென்பாண்டிச் சிங்கம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.’ என்று போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டினார்கள் தொண்டர்கள். இதை வீடியோ எடுத்து தலைமையிடம் சிலர் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். உடனே, கடுப்பான ஜெயலலிதா, அவர்களைப் பற்றிய செய்திகளை ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் போடவேண்டாம் என்றார். இப்போது வந்திருக்கும் அறிவிப்புக்குக் காரணம் யாரையோ பழிவாங்கத்தான் போல.
ஆனால், கட்சியின் தலைமைக் அலுவலகத்தில் இருக்கும் பட்சி வேறு மாதிரியான ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னது. ஓ.பன்னீர் செல்வத்துக்கும் செங்கோட்டையனுக்கு சமீப காலமாக குருப் பாலிடிக்ஸ் உச்சக்கட்டத்தில் இருக்கிறதாம். 'இது தெரிந்ததால்தான் இப்படியரு அறிவிப்பை அம்மா வெளியிட்டார்!’ என்றது அந்த பட்சி. ஆளாளுக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும், திடீர் அறிக்கையின் பின்னாலிருக்கும் உண்மையான காரணம் என்னவோ... மர்மமிகு அம்மாவுக்கே வெளிச்சம்!

பரக்கத் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக