சனி, 13 டிசம்பர், 2008

கருணாநிதி (சிரிப்புகள்) 50கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா கொண்டாட்டம் 2007 மே மாதத்தில் நடந்த நேரத்தில் அதுபற்றி கட்டுரை எழுதலாம் என்று முடிவு செய்து ஹரப்பா மொகஞ்சதாரோ ரேஞ்சுக்கு அகழ்வாராச்சியில் இறங்கினேன். அதிரடி, ஆர்பாட்டம், நகைச்சுவை, ஆவேசம் என கலந்துகட்டி கடந்த 50 ஆண்டுகளில் சட்டசபையில் கருணாநிதி பேசிய பேச்சுகள் ஏராளமாக சிதறிக் கிடந்தன. எதை தொகுக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில் கருணாநிதியின் ஜாலி பேச்சுகள் சுவாரசியமாக இருந்தது. அதனை ஒரு மாத காலம் திரட்டி தொகுத்து பத்திரிகையில் வெளியிட்டேன். இப்ப படித்தாலும் கூட சிரிக்காமல் இருக்கமாட்டார்கள் என்பதால் மீண்டும் உங்களுக்காக...
(இன்னைக்கு எழுத‌ மேட்ட‌ர் இல்ல‌... அத‌னால‌ க‌ட் அண்ட் பேஸ்ட்தான்)

அப்துல் லத்தீப்: ‘‘திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் இருக்கும் தேர் ஏன் எரிந்தது? எப்போது எரிந்தது. இதுவரை முறையான நடவடிகை எடுக்கவில்லையே ஏன்?’’
கருணாநிதி: ‘‘தீப் பிடித்தால் எரிந்தது’’ (1989 ஜன‌வ‌ரி 7)

பி.எச். பாண்டியன்: ‘‘ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஒரு ஆண்டுக்கு முன்பே வாங்கிவிட்டால் வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்.’’
கருணாநிதி: ‘‘காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்கு பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான். (1989 ஏப்ர‌ல் 7)

ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் சில நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்துவான்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா?. நாங்கள் எல்லாம் புதிய வித்துவான்கள்’’
கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்துவான்தானா? நான் வாசிக்கலாமா? கூடாதா?’’ (1989 மே 4)

நூர்முகம்மது: ‘‘கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைபடி, முதல்வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பபட்டு கன்னியாகுமரி மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலையை அமைக்க முதல்வர் முன் வருவாரா?’’
சபாநாயகர்: ‘‘நீங்கள் குமரி என்று சொல்வது கன்னியாகுமரியைதானே?’’
கருணாநிதி: ‘‘குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவிற்கு எனக்கு வயது இல்லை இப்போது’’ (1989 மே 6)

பி.வி.ராஜேந்திரன்: ‘‘உப்பு உற்பத்தி மரணபடுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து அது சவபெட்டிக்குள் சென்றுக்கொண்டிருப்பதை உணருகிறீகளா?’’
கருணாநிதி: ‘‘தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா? என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க அதற்கும் உப்புதான் தேவை’’ (1990 ஜ‌ன‌வ‌ரி 20)

ஸ்டாலின்: ‘‘சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முகப்பில், கன்னியாகுமரியில் அமைக்கப்படுகிற 133 அடி வள்ளுவர் சிலையையை போல அமைக்கும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?’’
கருணாநிதி: ‘‘அது ‘குமரி’க்கு மாத்திரம் தரப்படுகிற சிறப்பு.’’ (1990 மார்ச் 24)

முல்லைவேந்தன்: ‘‘போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்று பெண்கள் ஆசிரியர் பணியை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் அந்த இடங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண்களை ஆசிரியர்களாக நியமிக்கும் எண்ணம் அரசுக்கு இருக்கிறதா?’’
கருணாநிதி: ‘‘நடந்து செல்வதற்கு பெண்கள் தயாராக இருக்கும் போது முல்லை வேந்தனுக்கு கால் வலிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ (1990 மார்ச் 29)

ரகுமான்கான்: ‘‘இந்திராகாந்தியை கொலை செய்ய முயற்சித்தாக பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட அந்த வழக்கில் ஜாமீனில்தான் இருக்கிறோம்.’’
கருணாநிதி: ‘‘தவறான தகவலை தருகிறார். என்னை, பேராசிரியரை எல்லாம் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார்.’’ (1990 ஏப்ர‌ல் 9)

வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு இருக்கிறது?’’
கருணாநிதி: ‘‘அசையும் சொத்து அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்’’ (1990 ஏப்ர‌ல் 24)

குமரி அனந்தன்: ‘‘நான் தொலைபேசியில் பேசிய போது டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப்பாடு....’’ கருணாநிதி: ‘‘குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கொடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்து பாருங்கள்.’’ (1990 மே 7)

கோவை செழியன்: ‘‘ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே கோயில்களை எல்லாம் தேசியமயமாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?’’
கருணாநிதி: ‘‘ஆண்டவன்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசியமயமாக்கி ரட்சிக்க வேண்டும்.’’ (1971 டிச‌ம்ப‌ர் 18)

ஆற்காடு வீராசாமி: ‘‘கள்ளக்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களைக் கண்டுபிடிக்க சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் பெண்களை நியமிக்க அரசு பரிசீலிக்குமா?’’
கருணாநிதி: ‘‘சி.ஐ.டி. பிரிவில் போடலாம். ஆனால் எந்த அளவுக்கு ரகசியத்தை காப்பாற்றுவார்கள் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.’’ (1972 மார்ச் 13)

கருணாநிதி: ‘‘நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். எங்களை பிடித்து காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’’
அனந்த நாயகி: ‘‘அப்படி போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீகள்.’’
கருணாநிதி: ‘‘அதனால்தான் நாங்கள் இப்போது அப்படி செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்துவிடுகிறோம்.’’ (1973 மார்ச் 23)

காமாட்சி: ‘‘மதுரை மீனாட்சிக்கு வைர கிரீடம், வைர அட்டிகை இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’
கருணாநிதி: ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பை சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படும்.’’ (1973 மார்ச் 14)

சோனையா: ‘‘தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை எல்லாம் அறிய விரும்புகிறேன்.’’
கருணாநிதி: ‘‘பல பேர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவரங்களைக் கூறி உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்ட நான் விரும்பவில்லை.’’ (1973 மார்ச் 27)

ஆற்காடு வீராசாமி: ‘‘காதலர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறதே... ஆகவே வயது வந்த காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுமா?’’
கருணாநிதி: ‘‘யார் யார் காதலர்கள் என்ற பட்டியல் தெரிவிக்கப்படுமானால் அதற்கான பாதுகாப்பு முயற்சிகள் எடுக்க இயலும்.’’ (1973 ஆக‌ஸ்ட் 7)

லத்தீப்: ‘‘கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாக செய்திகள் வருகிறது. அதனால் அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டிருக்கிறது. அசுத்தத்தை போக்க கூவம் ஆற்றில் முதலை விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?’’
கருணாநிதி: ‘‘ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது.’’ (1971 டிச‌ம்ப‌ர் 8)

பீர் முகம்மது: ‘‘கருத்தடை ஆப்ரேஷன்கள் விவசாய கூலிகளுக்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதனால் அரசு, இதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.?’’
கருணாநிதி: ‘‘அரசு யாரையும் கட்டாயப்படுத்தி கருத்தடை செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மதுகூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.’’ (1968 மார்ச் 8)

கே.வினாயகம்: ‘‘மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் ‘லவர்ஸ் பார்க்’ ஒன்று இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தி தருமா?’’
கருணாநிதி: ‘‘இந்த விஷயத்தில் வினாயகத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.’’ (1969 மார்ச் 14)

ஜேம்ஸ்: ‘‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டிருக்கும் ராஜமன்னார் குழு ‘ஒன் ஸைடெட் லவ்’ போலதான் இருக்கிறது.’’
கருணாநிதி: ‘‘ஒன் ஸைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை’’ (1970 பிப்ர‌வ‌ரி 26)

சுப்புராயன்: ‘‘திருப்பூரை அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் ஒரு காவல் நிலையம் அமைக்க அரசிடம் கருத்துரு உள்ளதா?’’
கருணாநிதி: ‘‘ ‘கரு’ உருவாகி இருக்கிறது. பத்து மாதத்தில் முடிவடையும்.’’

ஹண்டே: ‘‘இந்த ஆட்சி மூன்றாம் தர ஆட்சியாகதான் இருக்கிறது.’’
கருணாநிதி: ‘‘ஹண்டே கூறியதை நான் மறுக்கவில்லை. இந்த ஆட்சி நான்காந்தர ஆட்சிதான். நாட்டில் உள்ள நான்காந்தர மக்களுக்காகவே நடைபெறுகின்ற ஆட்சி இது.’’

அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர்: ‘‘திருச்செந்தூர் முருகனின் வேலை காணவில்லை என்று நடைபயணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு கருணாநிதி சென்றார். அவரை பார்க்க விரும்பாத முருகன் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கே வந்துவிட்டார். அதனால் கருணாநிதி போன போது திருச்செந்தூர் கோயிலில் முருகன் இல்லை.’’
கருணாநிதி: ‘‘இதுவரையில் நான், திருச்செந்தூர் கோயிலில் இருந்த வேல் மட்டுமே காணாமல் போய்விட்டது என்று எண்ணி இருந்தேன். உறுப்பினர் பேசுவதை பார்க்கும் போது முருகன் சிலையும் காணாமல் போயிருக்கிறது என்று தெரிகிறது.’’

அனந்தநாயகி: ‘‘ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோர் ஆலயத்திற்கு வரும் போது பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆண்டவன் கொடுக்காத பாதுகாப்பையா இவர்கள் கொடுக்க முடியும்?’’
கருணாநிதி: ‘‘ஆண்டவனுக்கும் ஆளுநர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது’’ (1971 ஜுலை 16)

அனந்தநாயகி: ‘‘அம்மன் கோவில் என்ன? ஈஸ்வரன் கோவிலை பராமரிப்பதற்குகூட சக்தி, ‘சக்திகளுக்கு’ உண்டு’’
கருணாநிதி: ‘‘ ‘சக்தி’ ஈஸ்வரர்களையே ஆட்டிப் படைப்பவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’’ (1971 ஜூலை 27)

வி.கே.ராஜாப் பிள்ளை: ‘‘தலைமைச் செயலகத்தை சென்னையில் கட்டுவதைவிட தமிழ்நாட்டுக்கு மத்தியில் இருக்கும் திருச்சியில் கட்டுவதற்கு அரசு ஆலோசிக்குமா’’
கருணாநிதி: ‘‘திருச்சியில் ஏற்கனவே மலைக்கோட்டை இருக்கிறது. இந்தக் கோட்டை தேவையில்லை’’ (1972 மார்ச் 8)

அனந்த நாயகி: ‘‘எதிர்க்கட்சிகாரர்கள் உட்காரும் சட்டசபை லாபியில் சி.ஐ.டி.கள் வருகிறார்கள். அங்கே எதிர்க்கட்சியினர் என்ன பேசுகிறார்கள் என்று லாபியில் சி.ஐ.டி.களை போட்டு புலனாய்வு செய்ய வேண்டுமா’’
கருணாநிதி: ‘‘நீங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்தால், அவர்கள் சி.ஐ.டி.யாக இருக்க மாட்டார்.’’ (1973 மார்ச் 28)

நாஞ்சில் மனோகரன்: ‘‘என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தெருவுக்கு குட்டி செட்டி தெரு என்று பெயர். செட்டியை அடித்தால் குட்டி மிச்சம் இருக்கும். குட்டியை அடித்தால் செட்டி மிச்சம் இருக்கும். இதில் எதை நான் வைத்துக்கொள்ள’’
கருணாநிதி: ‘‘அமைச்சருக்கு இரண்டில் எது பிடிக்குமோ அதை வைத்துக்கொள்ளலாம்.’’ (1990 ஏப்ர‌ல் 9)

‘‘குருத்தன்கோட்டில் காவல் நிலையம் அமைப்பது பற்றிய கேள்வி இது. இதிலே கஞ்சா இடம் பெற இயலாது. இருந்தாலும் இந்த கஞ்சாப் பயிர் செய்பவர்கள் ‘சிறைக்கஞ்சா’ சிங்கங்களாக இருக்கிறார்கள்’’ (1989 ஏப்ரல் 11)

‘‘1981ம் ஆண்டு கோவையின் மக்கள் தொகை கணக்கு 7,04,000. அதற்கு பிறகு அந்த நகர மக்களுடைய முயற்சியால் மேலும் அந்த மக்கள் தொகை வளர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.’’ (1989 ஏப்ர‌ல் 21)

‘‘இப்படிதான் எதையும் குறிப்பிட்டு சொல்லாமல் விசாரணைக் கமிஷன் போடு கமிஷன் போடு என்று சொன்னால் எங்கே போடுவது? நான் கமிஷன் வாங்கினால் அல்லவா உங்களுக்குக் கமிஷன் போட’’ (1975 ஏப்ர‌ல் 11)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு இருக்கிறது?’’
கருணாநிதி: ‘‘அசையும் சொத்து அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்’’ (1990 ஏப்ர‌ல் 24)

//

தலைவர்னா தலைவர்தான்....
விழுந்து விழுந்து சிரித்தேன்.

பெயரில்லா சொன்னது…

ayya,
Arasiyal arampathiliyurunthu,
arthameyillamal ethayum pesupavarthan karunanithiya?

SanJaiGan:-Dhi சொன்னது…

:)))))))

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

நல்ல நகைச்சுவை பதிவு. இவருக்கு மட்டும் எப்படியெல்லாம் தோணுது.. ??


வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக