செவ்வாய், 2 டிசம்பர், 2008

எப்போதோ எழுதிய கவிதை

கருணாநிதி குடும்பமும் மாற‌ன் ச‌கோத‌ரர்க‌ளும் ஒன்றாகிவிட்ட‌ நிலையில் எப்போதோ க‌ருணாநிதி எழுதிய‌ க‌விதை இப்போது ஞாப‌க‌த்துக்கு வ‌ந்து தொலைக்கிற‌து. மாற‌ன் ச‌கோதர‌ர்க‌ள் மீது கோப‌த்தில் கொட்டிய‌ அக்னி வார்த்தைகள் இப்போது உங்க‌ளுக்காக‌...


ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்

எண்பத்தி நான்கு என அகவை ஆனாலும்; பதிநான்கு வயதுப் பள்ளி மாணவனாக

இன்னும் படிக்கவே ஆசை எழுகிறது இரு வண்ணக்கொடி பிடிக்கவே கரம் துடிக்கிறது

அஞ்சுகம் அன்னை மடியில் கொஞ்சி மகிழவும்; அப்பா முத்துவேலர் கரம் பிடித்து ஏர் தொழுது உழுதிடவும்

அய்யகோ நெஞ்சம் கெஞ்சுகிறதே வரம்கேட்டு அந்த வாய்ப்புக்கு! அக்காள் இருவர் அரவணைப்பில் சுகம் கண்ட உள்ளம்; இனி

எக்காலம் எனைத் தூக்கி மகிழ்வர் எனும் ஏக்கமே குடி கொள்ளும்! முக்காலும் இனி வரப் போவதில்லை உயிர் மூச்சாக எனைக் கொண்ட சகோதரிகள்!

மாறன், அமிர்தம், செல்வம் மருமகப் பிள்ளைகள் மான் குட்டிகளாய்; மார் மீதும் தோள் மீதும் பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம்

ஓய்ந்து போயினவே என் இளமையோடு அவை ஒழிந்தே போயினவே; தேய்ந்த என் முதுமைத் தோள்களிலே தாங்கும் வலிமை இல்லாததினால்!

துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்; தோள்மீது கை போட்டுத் துணைக்கு வந்து விட்டோம் என்பதும் கனவுதானே!

பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்

பட்டைத் தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை;


தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!

நாடு போற்றிய நல்லறிவாளனே

ஏடு புகழ் என்னருங் கண்மணியே!

தோகாவில் திறன்காட்டி இந்தியத்

திருநாட்டின் கீர்த்தி தொல் புவியில் நிலைநாட்டியவனே!

இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;

இத்தனைக்கும் காரணம் இந்த ‘மாமன்தான்’ என்று;

எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்

இறுதி வாசகமாய் நான் உங்கள் வளர்ப்பன்றோ என்று

அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி

நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக

ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே ஆரமுதே!

தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!

மகனே ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற

மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;

தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்

தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;

வசைமாரி பொழிகின்றார்

மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி

மறையாமல் காப்பதற்கும் இந்தத் தமிழ்

மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து

கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்

கண்ணில் விரலை விட்டு

ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்

எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை

எச்சரிக்கையாகக் கொண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக