வெள்ளி, 12 டிசம்பர், 2008

‘ஒரு பூகோளமே பலி பீடமாய்...’
இலங்கைப் பிரச்னையைப் புதிய கோணத்தில் அலசி ‘ஒரு பூகோளமே பலி பீடமாய்...’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் அ.தி.மு.க.முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன்.வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரான புலமைபித்தன், சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து அங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கூட்டங்களில் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

ப‌த்திரிகையாளன் என்கிற முறையில், அவரோடு எனக்குப் பழக்கம் உண்டு. புலமைப்பித்தனிடம் பலமுறை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருகிறார். ‘எங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் ஆயுதங்கள் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரும்.அதற்கு தமிழர்களின் ஆதரவு அவசியம். அந்த ஆதரவு நெருப்பு அனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் புலவர். பிர‌பாக‌ரனைப் ப‌ற்றிச் சொல்லும் போதெல்லாம் த‌ம்பி என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த‌போது த‌மிழ‌க‌த்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள் புலிகள். அப்போது எம்.ஜி.ஆருட‌ன் நெருக்கமாக இருந்த புலமைப்பித்தன், புலிக‌ளுட‌ன் இய‌ற்கையாக‌வே ப‌ழ‌க்க‌த்தை ஏற்ப‌டுத்திக் கொண்டார். ச‌ந்தோமில் இருக்கும் புலைமைப்பித்த‌ன் வீட்டுக்கு போராளிக் குழுக்க‌ள் வ‌ருவ‌தும் போவ‌துமாக‌ இருந்தார்க‌ள். பிர‌பகரனே, புல‌வ‌ர் வீட்டுக்கு வ‌ந்து சாப்பிட்டுவிட்டுப் போகும் அள‌வுக்கு அவருடன் புலவர் நெருக்கமாக இருந்த காலகட்டம் உண்டு. ‘‘தமிழகத்தில் புலிகளுக்கு பயிற்சி அளிக்க எம்.ஜி.ஆர் நடத்திய கால்கோள் விழாதான் இன்று அவர்கள் பெரிய ராணுவமாக உருவாகக் காரணம். எம்.ஜி.ஆருக்கு மரணம் வராமல் இருந்திருந்தால் எப்போதோ ஈழம் பிறந்திருக்கும். அவர் இறப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரிய இழப்புதான்.’’ என்று சொல்லி வ‌ருத்த‌ப்ப‌டுவார்.

போதும்... புத்தக விஷயத்திற்கு வருகிறேன். ‘ஒரு பூகோளமே பலி பீடமாய்’ புத்தகத்தை இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் நினைவு நாளான செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் வெளியிடத்தான் ஆரம்பத்தில் புலமைப்பித்தன் முடிவு செய்திருந்தார். அது முடியாமல் போய்விட்டது. இலங்கையில் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து அழிக்கப்படுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று தொடர்ந்து சிந்தித்த போது புலமைப்பித்தனின் பேனாவில் இருந்து பிறந்ததுதான் ‘ஒரு பூகோளமே பலி பீடமாய்’.

பல மாதங்களாக உழைத்து எழுதப்பட்ட அந்தப் புத்தகதில் இந்தியாவின் பூகோள அமைப்புதான் இலங்கைப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் என்று அலசியிருக்கிறார். புத்தகத்தின் சாராம்சம் இதுதான்...
இந்தியாவின் வடக்கே இமயமலை இருக்கிறது. கிழக்கும் மேற்கும் நிலபரப்புகள் இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கடல்தான். நிலப்பரப்பு வழியாக நம் மீது அன்னிய நாடுகள் தாக்குதல் நடத்த முயன்றால் வடக்கில் இருந்தோ தெற்கில் இருந்தோ வரவேண்டும். வடக்கில் நமது பாதுகாப்புக்காக படைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். தெற்கில் நமக்கு பக்கத்திலேயே இலங்கை இருப்பதால் அங்கே நமது படைகளை நிறுத்த முடியாத நிலை. வடக்கில் நமது நிலத்தில் நாமே படைகளை நிறுத்தி கொள்வதைப் போல தெற்கில் நிறுத்த முடியவில்லை. தெற்கே இருக்கும் நாடான இலங்கை நமக்கு நேசமான நாடாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்குப் பாதுகாப்பு என்று இந்தியா கருதுகிறது. அதனால் இந்தியாவுக்குத் தவிர்க்க முடியாத தேசமாக இலங்கை இருக்கிறது. இந்த பூகோள அமைப்புதான் எல்லா பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். இந்த அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்களுக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையாக அமைந்த ‌பூகோள அமைப்பால் ஏற்படயிருக்கும் ஆபத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியாவை ஆண்ட மூன்று பிரதமர்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் தமிழர்கள் தண்டிக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது. லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் ஆட்சிக்காலத்தில் துரோகங்கள் அரங்கேற்றப்பட்டன. லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த நேரத்தில் 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போது இலங்கையின் ‘கட்டுநாயகா’ விமான நிலையத்தைப் போருக்காகப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் முயன்றது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ‘பாகிஸ்தான் போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக் கூடாது.’ என்று அப்போது இலங்கை அதிபராக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது இலங்கை. தமிழகத்தில் இருந்து வந்து இலங்கை தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒன்பதரை லட்சம் தமிழர்களில் ‘ஐந்து லட்சம் தமிழர்களை இந்தியா திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.’ என்று நிபந்தனை போட்டது இலங்கை. இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டது. இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இலங்கை நம்மோடு நட்புறவோடு இருக்க தமிழர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இதற்கு பூகோள அமைப்பே காரணமாக அமைந்துவிட்டது.

அடுத்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதும் இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போதுதான் பங்களாதேசம் என்ற நாடு உருவானது. போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘என்டர்பிரைஸ்’ என்ற போர்க் கப்பலை இந்திய கடல் எல்லையில் நிறுத்தியது அமெரிக்கா. அப்போது ரஷ்யா நமக்கு ஆதரவாக இருந்தால் இந்த விவகாரம் ஐ.நா சபை வரை போனது. ‘இந்தியப் பெருங் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்துகொண்டோ கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளை அச்சுறுத்தக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது ஐ.நா. அதனால் அமெரிக்கா பின்வாங்கியது. அதே நேரம் தனக்கு தரைப்பகுதி வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்து இலங்கையில் தளம் அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்க.. வேறு வழியில்லாமல் ‘தண்ணீரில் மிதக்கும் தங்கச் சுரங்கம்’ என்று வர்ணிக்கப்படும் கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் இந்திரா காந்தி. இலங்கைக்குள் அமெரிக்காவின் ஊடுருவல் நடந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கச்சத் தீவு இலங்கைக்குக் காவு கொடுக்கப்பட்டது. நிலப்பரப்போடு நீர்ப்பரப்பும் வான் பரப்பும் இலங்கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன‌. பல ஆண்டுகளாக தொடங்கி இன்று வரையில் நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்களே அதற்கு அடிப்படைக் காரணமே கச்சத் தீவுதான். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம். அதற்கு இலங்கை அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலும் கவலைப்படாமல் கண்மூடிக் கொண்டு இருக்கிறது இந்தியா.

அடுத்த துரோகம் ராஜீவ் காந்தி ஆட்சியில் அரங்கேறியது. திரிகோணமலையைத் தனது தளமாக்கிக் கொள்ள அமெரிக்கா முயன்ற நேரம் அது. இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. இதுபற்றி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. புலிகளிடம் அடிவாங்கி இலங்கை பலவீனமாக இருந்த அந்த சமயத்தில் சாதுரியமாகக் காய் நகர்த்தியது இந்தியா. இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாகச் சொல்லி ஜெயவர்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட்டார். இந்தியாவுக்கு அரணாக ஈழப் பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, தனது பாதுகாப்புக்காகத் தமிழர்களை பலிகடாவாக்கி இந்தியா போட்ட மறைமுக ஒப்பந்தம் அது. சொந்த நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட ஈழத் தமிழர்கள் எப்படி அந்நிய நாட்டின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வார்கள். புலிகளை ஒடுக்கி அந்த ஈழப்பகுதிகளைக் கைப்பற்ற மற்ற போராளிக் குழுகளான ஈராஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்றவற்றைத் தூண்டிவிட்டது அங்கே போன இந்திய அமைதிப் படை. சுமார் 7 ஆயிரம் பேர்களைக் கொன்று குவித்தார்கள். இந்தியா பாதுகாக்கப்பட‌ வேண்டும் என்பதற்காக பூகோளமே பலிபீடமாய் மாறிப் போனது. இப்ப‌டி புத்த‌க‌த்தில் எழுதிருக்கும் புல‌மைப் பித்த‌ன் அத‌ற்கான‌ தீர்வையும் அந்த‌ புத்த‌க‌த்தில் சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்தான். அதற்காக இந்தியாவின் பூகோளத்தைத் திருத்த முடியாது. ஆனால் இலங்கையின் பூகோளத்தை திருத்தத் முடியும். ‘தமிழ் ஈழம்’ ‘சிங்கள தேசம்’ என்று இலங்கை இரண்டாகப் பிரிந்தால்தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு. தமிழ் ஈழம் பிறக்காவிட்டால் தொடர்ந்து போர்ச் சூழல் இருந்துகொண்டே இருக்கும். இது இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். தமிழ் ஈழம் பிறப்பதுதான் இலங்கைத் தமிழர்கள், சிங்கள‌ அரசு, இந்திய அரசு மூன்று தரப்புக்குமே நன்மை தரக்கூடியது. ஜெயவர்த்தனேவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது போல தமிழ் ஈழம் பிறந்தால் தம்பி பிரபாகரனோடு இந்தியா ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். தெற்கே நமக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஈழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும். அதோடு 60 ஆண்டு கால தமிழர்கள் போராட்டத்திற்கு விடிவு பிறக்கும். 1947க்கு பிறகு உலகம் முழுவதும் 104 நாடுகள் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்துகொண்டிருக்கிறது. தமிழ் ஈழம் பிறப்பது காலத்தின் கட்டாயம். தமிழ் ஈழத்தைத் தள்ளி போடலாம்.. தடுக்க முடியாது... என்று புத்தகத்தை முடித்திருக்கிறார் புலமைப்பித்தன்.

இதை இப்போது எழுத காரணம் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பதால் மட்டுமல்ல... அந்த புத்தகத்தில் என்னை பற்றியும் சில வரிகளை எழுதியிருக்கிறார் டொட்டொடய்ங்....

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த புத்தகம் தமிழகத்தில் கிடைக்கும். ஆனால், மற்ற இடங்களில் கிடைக்குமா ? எப்படிப்பெறுவது.

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

நல்ல பரிந்துரை.. படாபஃட்..

கருத்துரையிடுக