திங்கள், 8 டிசம்பர், 2008

த‌க‌ர்ந்து போன‌ பி.ஜே.பி.யின் க‌ன‌வு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டார் ஜெயலலிதா. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என்று சகலத்தையும் முடித்துவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பி போவதுதான் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால் கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி ஜெயலலிதாவை முந்திக்கொண்டார். ஆனால் இந்த முறை தனது வழக்கமான அதிரடிகளை ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்த்தது மூலம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க போகும் தேர்தலுக்கு இப்போதே குதிரைப் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா. மெகா கூட்டணியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் இப்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே எஞ்சி இருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பே கருணாநிதி, கூட்டணிக் கட்சிகளை இழுக்க ஆரம்பித்தார். காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அப்போது தி.மு.க. அணியில் இடம்பெற்றன. அந்த கூட்டணி உருவாவதற்கு சில மாதங்கள் முன்பு வரையில் அப்போதைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க.

மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு கூட்டணியில் இருந்து கழன்று கொண்ட தி.மு.க., மத்திய அரசில் இருந்து வெளியேற பல காரணங்களை அப்போது அடுக்கியது. ‘தமிழ் செம்மொழி அந்தஸ்து, சேது சமூத்திர திட்டம் என்று தமிழக திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை’ என்று புகார்கள் படிக்கப்பட்டன. பொடா சட்டத்தில் வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி ‘பொடா சட்டத்தை தவறாக ஜெயலலிதா பயன்படுத்துகிறார். இந்த விஷயத்தில் பி.ஜே.பி. அரசு எந்த அக்கறையும் எடுத்துகொள்ளவில்லை’ என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக வைத்தது தி.மு.க. அதன்பிறகு சிறையில் இருக்கும் வைகோவை கருணாநிதி போய் பார்த்தார். அதன்பிறகுதான் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி எல்லாம் உருவானது. இது கடந்த தேர்தல் வரலாறு.

ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டிருக்கும் நிலையில் அடுத்த தேர்தலுக்கு தயாராகி நிற்கின்றன அரசியல் கட்சிகள். இதில்தான் இப்போது அ.தி.மு.க. வேகமாக காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. உடன் கூட்டணி வைத்த போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. ஆனால் அதன்பிறகு 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது அ.தி.மு.க. அதனால்தான் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்காக காய்களை நகர்த்த தொடங்கினார் ஜெயலலிதா.

அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார். 2007ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு வீட்டில் நடந்த மூன்றாவது அணியின் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அதன் பிறகு போயஸ் கார்டனில் மூன்றாவது அணியின் இரண்டாவது கூட்டம் நடந்தது. தடபுடல் விருந்தோடு நடந்த அந்த கூட்டத்தில் முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா, போன்ற தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். மூன்றாவது அணிக்கு ‘ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி’ என்று பெயர் எல்லாம் வைத்தார் ஜெயலலிதா. ஆனால் என்ன நினைத்தாரோ அதன் பிறகு மூன்றாவது அணியை ஒரங்கட்ட ஆரம்பித்தார் ஜெயலலிதா.

சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கிய முக்கிய தலைவர் ஜெயலலிதா. மூன்றாவது அணியில் அ.தி.மு.க. இருந்த நேரத்தில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அப்போது அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக நிறுத்த வேண்டும் என்று மூன்றாவது அணியின் சார்பாக தீர்மானம் போட்டார்கள். அப்துல் கலாம் ‘போட்டியிட மாட்டேன்’ என்று சொல்லி ஒதுங்கி கொண்டார். மூன்றாவது அணியில் இடம் பெற்ற கட்சிகள் சார்பாக இருக்கும் எம்.பி.கள் எம்.எல்.ஏ.கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்கிற குழப்பத்தில் இருந்தார்கள். காங்கிரஸ் சார்பில் பிரதீபா பாட்டிலும் பி.ஜே.பி. சார்பில் ஷெகாவத்தும் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்க மூன்றாவது அணி தீர்மானித்தது. இதை ஜெயலலிதா விரும்பவில்லை. அதனால் யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களும் எம்.பி.களும் தேர்தல் அன்று அவர்களாகவே போய் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஓட்டுப் போட்டனர். ‘எனக்கு தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டார்கள்’ என்று குதர்கமான அறிக்கையை அப்போது விட்டார் ஜெயலலிதா. இதன் மூலம் மூன்றாவது அணிக்கு ஜெயலலிதா முழுக்கு போட்டார். அதன்பிறகு நடந்த மூன்றாவது அணி கூட்டங்களில் எல்லாம் அவர் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு ஆதரவாக ஓட்டு போட்டதால் பி.ஜே.பி. பக்கம்தான் ஜெயலலிதா போவார் என்று பலர் நினைத்தார்கள். அப்படி நினைக்க காரணமும் இருக்கிறது. மூன்றாவது அணியில் இருந்து விலகிய பிறகு பி.ஜே.பி.யின் தமிழக பொறுபாளரும் எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். சேது சமூத்திர ராமர் பால விவகாரம் வெடித்த போது பி.ஜே.பி.யின் குரலாக ஜெயலலிதா அறிக்கைகள் வெளியிட்டார். இதனால் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க கைகோர்க்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்தது. இதனை உறுதிபடுத்தும் வகையில் மோடியின் சென்னை விசிட் அமைந்தது.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மோடி அப்போது வந்தாலும் போயஸ் கார்டனுக்கு வந்ததுதான் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. போயஸ் கார்டனில் மோடிக்கு விருந்து கொடுத்தார் ஜெயலலிதா. பி.ஜே.பி.யில் வாஜ்பாய் அத்வானி என்று எத்தனையோ தலைவர்களிடம் பழகியிருந்தாலும் மோடி மீது மட்டும் ஜெயலலிதாவுக்கு தனி அக்கறை உண்டு. அதனால்தான் அவர் பதவியேற்பு விழாவுக்கு நேரில் போய் வாழ்த்து சொன்னார். ஆனால் அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தது. அணு ஒப்பந்தத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் வாங்கினார்கள். ஆனாலும் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதனால் ‘காங்கிரஸ் கட்சி இருக்கும் எந்த கூட்டணியிலும் நாங்கள் இடம்பெற மாட்டோம்.’ என்று இடதுசாரிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில்தான் இலங்கை பிரச்னை பெரிதாக வெடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் அனைத்துக் கட்சி சார்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினார். அந்த ஆர்பாட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த ஆர்பாட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லை என்று ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டது. ஆனால் தே.மு.தி.க.வை அந்த ஆர்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். இதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக முத்துசாமியை அனுப்பி வைக்கும் முடிவை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டார் ஜெயலலிதா.

அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி. சேரும் கனவு கிட்டதட்ட தகர்ந்து போயிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடதுசாரிகள் சேர்ந்துவிட்ட நிலையில் பி.ஜே.பி. நிர்கதியாக நிற்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ‘என் தேசம் என் வாழ்கை’ என்று தலைப்பில் அத்வானி எழுதிய புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய சோ ‘தீவிரவாதத்தை எதிர்ப்பதில் தொடங்கி நிறைய விஷயங்களில் பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க.வுக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. அதனால் இரண்டு கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.’ என்று பேசினார். அடுத்த சில நாட்களிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பரதன் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார். உடனே அடுத்த நாள் சோ ஜெயலலிதாவை போய் பார்த்தார். இடதுசாரிகளோடு ஜெயலலிதா கூட்டணி வைத்துகொண்டால் அந்த கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெற முடியாமல் போய்விடும். அதனால்தான் அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.க்கும் பொதுவான ஒருவரான சோவை தூதுவராக அனுப்பி வைத்தார்கள் பி.ஜே.பி.காரர்கள். ஆனால் கனவு தகர்ந்து போனதுதான் மிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக