வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

டாக்டர் பிரகாஷின் சிறைக்கதைகள் ‍ 4

கடாய் கொலைகள்

அது ஒரு பரபரப்பான செய்தி. கொடூரமான கொலை. துண்டு துண்டா வெட்டிய உடம்பு. போலீஸ் கதை பிரகாரம் அதில் சில துண்டுகள் கடாயில் வைத்து சாம்பல் ஆக்கியதால் பத்திரிகையில் இது ‘கடாய் கொலை’யாகப் பரபரக்கப்பட்டது.

அஸ்லம்கான் மற்றும் ராக்கேஷ் சர்மா இவர்கள்தான் வழக்கில் இருக்கும் இரண்டு எதிரிகள். சென்னை முதல் விரைவு நீதிமன்றத்தில்தான் நடந்து கொண்டு இருந்தது அந்த வழக்கு. கூட உடைந்தையாக இருந்த ராக்கேஷ் சர்மாவுக்கு பெயில் கிடைத்துவிட்டது. ஆனால் முதல் எதிரியான அஸ்லம்கான் ஜாமீன் மனு திரும்பத் திரும்ப தள்ளுபடி ஆகிக்கொண்டிருந்தது. ஹைகோர்ட் உத்தரவுபடி தினமும் நடக்கும் இந்த ஸ்பீடு ட்ரையல் வழக்கை அஸ்லம்கான் சிறை உள்ளிருந்து, ராக்கேஷ் சர்மா வெளியிலிருந்தும் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

விரைவு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது என் வழக்கு. தினமும் கோர்ட் வண்டியில் அஸ்லம்கானுடன் சிறையில் இருந்து நான் செல்வேன். வண்டி ஜன்னல் அந்த சைடில் இருந்து அஸ்லமுடன், ராக்கேஷ் சர்மா பேசுவான். அஸ்லம்கான் மெல்ல மெல்ல ஃபிரண்ட் ஆகி விட்டான். அவனுக்கு ஒரளவு தமிழ் தெரியும். அதனால் நீதிமன்றத்தில் என்ன நடக்குதுன்னு அவனுக்கு நன்றாகத் தெரியும். தினமும் வண்டிக்கு திரும்பி வந்து டீடெய்லாக என்ன நடந்து என்று என்னிடம் கூறுவான்.

நீதிமன்றத்தில் சிறைவாசி பொய் சொன்னாலும் வண்டியில், கூட இருக்கும் கைதியிடம் பேசுவது, முக்கால்வாசி நிஜம். அஸ்லம்கான் ஒரு ஆறடி உயரத்தில் தாடி வைத்த தலையில் முஸ்லிம் தொப்பி போட்ட கண்ணாடி அணிந்த ஒரு வாட்டசாட்டமான மனிதன். ஆனால் அவன் குரல் சீராகவும் சாப்டாகவும்தான் இருக்கும். பாதி தமிழும் பாதி இந்தியிலும் அவன் என்னிடம் சொல்லும் விஷயங்கள் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

குற்றப்பத்திரிகை பிரகாரம் செத்தவன் பெயர் முகம்மது இப்ராஹிம். வேஸ்ட் பேப்பர் பிஸினஸ். அவன் அஸ்லம்கானிடம் பார்ட்னர். வியாபார சண்டையில் உருவானது கொலையில் முடிந்து விட்டது.

( ‘‘மோட்டிவ்கே மாம்லே மே தோ போலீஸ் ஏக்தம் கரெக்ட் ஏ..... மோட்டிங் விஷயத்த்தில் காவலாளிகள் தப்பு செய்யவில்லை.’’)

அவர்கள் இருவரும் சென்னைக்கு வந்த போது அஸ்லம்கான், முகம்மது இப்ராஹிமை ஒரு பழைய டெலிபோன் டைரக்டரிகள் அடங்கிய ஒரு பாழடைந்த குடோனுக்கு அழைத்து சென்றான். ( ‘‘இதுவும் கரெக்ட்தான் டாக்டர் சார். இந்த டெலிபோன் டைரக்டரி சண்டையால்தான் அவனைக் கொலை செய்யணும்னு முடிவு செய்தோம்.’’)

அங்கே ஒரு கப் காப்பியில் தூக்க மருந்துகளை கலக்கி அஸ்லம், முகம்மது இப்ராஹிமுக்கு கொடுத்த பின், கத்தியால் அவன் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டான். இரண்டு கை, இரண்டு கால், உடம்பு இரண்டு துண்டு.

( ‘‘ஆதா சச்சே ஆதா ஜீட்டே...... பாதி நிஜமும் பாதி பொய்யும்’’ )

உடம்பு துண்டுகளை சிமென்ட் கோணிகளிலும் பிளாஸ்டிக் சீட்டுகளிலும் தனித் தனியாக பேக்கிங் செய்து உள்ளூரில் அங்கங்கு வீசினான். இதை செய்யும் போது அவன் உட்கார்ந்திருந்த பைக்கை ஓட்டியவன்தான் ராகேஷ் சர்மா (இது நிஜம்தான்)

தலையை ஒரு கடாயை வைத்து வறுத்து கருக்கி சாம்பலாக்கி கூவத்தில் கலக்கிவிட்டான். (‘‘ஏக் சோ மஸ்தி ஜீட்.... நூறு சதவீத பொய்’’)

காவலர்கள் ஏதோ புத்திசாலியாக டிடெக்டிவ் ஒர்க் செய்து இவர்களை பிடிக்கவில்லை.

முகம்மது இப்ராஹிம் காணாமல் போனபின், சந்தேகப்பட்டு மெட்ராஸ§க்கு வந்த அவன் அண்ணன் ஏரியா ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை பார்த்து 50 ஆயிரம் கொடுத்து ஒரு புகாரும் செய்தான்.

‘‘எனக்கு அஸ்லம்கான் மேல் சந்தேகம். என் தம்பி காணாமல் போனதற்கு அவனும் ராகேஷ் சர்மாவும்தான் காரணம். விசாரணை செய்துவிட்டு என் தம்பி உயிரோடு இருக்கிறானா அல்லது செத்து விட்டானா என்று கண்டுபிடித்து சொல்லி விடுங்கள்.’’

அந்த ஐம்பதாயிரம் ரூபாய் காட்டின சூட்டில் சப் இன்ஸ்பெக்டரும் ஹெட்கான்ஸ்டபிளும் முராதாபாத்துக்கு சென்றார்கள். கொடுத்த முகவரியில் ராகேஷ் சர்மா பிடிபட்டான். ஸ்டேஷனுக்கு போய் இரண்டு தட்டு தட்டியவுடன் நிஜத்தை உளறி விட்டான். எஸ்.ஐ.யும் ஏட்டும் அவனை கூட்டிக்கொண்டு மெட்ராஸ§க்கு வந்தார்கள். ஆனால் சட்டப்பிரகாரம் அவன் அரஸ்டை காட்டவில்லை. அவர்களுக்கு தேவை அஸ்லம்கான். அவன் இருக்கும் கிராமத்துக்கு ஒரு எஸ்.ஐ. ஒரு ஏட்டு மற்றும் மூன்று காவலர்கள் சென்றார்கள். ஆனால் ராகேஷ் சர்மாவை பிடித்த மாதிரி அவ்வளவு சுலபமாக அஸ்லம்மை பிடிக்க முடியவில்லை. அந்த ஊரெல்லாம் ரவுடிகள்தான். தமிழ்நாடு காவலர்களை பிடித்து அடித்து யூனிபார்மை கழற்றி ஜட்டியுடன் மரத்தில் கட்டிவிட்டார்கள். அஸ்லம்கான் மேல் முராதாபாத்தில் நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு வழக்கில் ஜாமீனை ரத்து செய்துவிட்டு அவன் சரண்டர் ஆகி விட்டான். தமிழ்நாடு போலீஸ் பிடி வாரண்டை இங்கே கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் ஒரு தடவை ஆஜர் ஆனதினால் அவனை ஜாஸ்தி அடிக்க முடியவில்லை. அப்படி செய்து இருந்தாலும் அஸ்லம்கான் வாயை திறந்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.

விஷயங்கள் எல்லாம் ஒரு பூட்டின குடேனுக்குள் நடந்ததால் அஸ்லம்கானை தவிர என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிண துண்டுகளை அங்கேயும் இங்கேயும் வீசியதை தவிர ராகேஷ் சர்மாவுக்கு வேறு எதுவும் தெரியாததால் குற்றப்பத்திரிகையை ஒரு கற்பனை செய்த மாதிரி கதையை ஜோடித்தார்கள்.

நீதிமன்றத்தின் வெளியே வேனில் உட்கார்ந்து கொண்டு அன்றைய தினம் நடந்த விஷயங்களை அஸ்லம்கான் என்னிடம் இன்ரஸ்ட்டா கூறுவான். முதல் நாள் வந்த சாட்சி, மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு நபர். இரண்டு மில்லி கிராம் வேல்யம் என்ற தூக்க மாத்திரைகள்......... 5 அஸ்லம்கான் வாங்கியதாக சாட்சி சொன்னான்.

(‘‘ஐந்து மாத்திரை சாப்பிட்டால் ஒரு எலிக் கூட சாகாது, நான் அவனைக் கொன்னது கோக்கோ கோலாவில் பூச்சி மருந்து கொடுத்துதான். சொன்ன சாட்சி எல்லாம் பொய்.’’)

மற்றொரு நாள். பிளாஸ்டிக் கடைக்காரன், அஸ்லம்கான் அவன் கடையில் இருந்து பிளாஸ்டிக் சீட் வாங்கியதாக சாட்சி சொன்னான்.

(‘‘டாக்டர் சார். அவன் கடையில் இருந்து நான் பிளாஸ்டிக் சீட் வாங்கியிருக்கிறேன். ஆனால் அது அந்த டெலிபோன் டைரக்டரிகளை பேக் செய்வதற்காகதான். பிணத்துண்டை எல்லாம் நான் சிமெண்ட் கோணிகளில்தான் பேக் செய்தேன். கடையில் இருந்து சீட் வாங்கி பிணத்தை பேக் செய்த மாதிரி ஜோடித்த பொய் சாட்சியை வைத்து இவர்களால் தண்டனை எப்படி வாங்கித் தர முடியும்.’’)

அப்புறம் இன்ஸ்பெக்டர் கொலை நடந்த கத்திகளை அடையாளம் காட்டினான். போஸ்ட் மார்ட்டம் டாக்டரும் பிணத்துண்டுகள் போட்டோவைக் காட்டிக் கொண்டு சாட்சி சொன்னார்.

(‘‘நீதிமன்றத்தில் காட்டின அந்த ஆறு ஏழு இன்ச்சு கத்திகளை வைத்து கை கால் வெட்டுவதற்கே ஒரு வாரம் ஆகும். நான் உபயோகப்படுத்திய கத்திகள் எல்லாம் பெரிய பெரிய கசாப்பு கத்திகள். அது எல்லாம் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன் என்று எனக்குதான் தெரியும்.’’)

அடுத்த நாள். ஒரு கறுப்பு இரும்பு கடாயை நீதிமன்றத்தில் காட்டி ‘இதை வைத்துதான் மண்டையை எரித்து சாம்பலாக்கினேன்.’ என்று சாட்சிகள் கூண்டில் ஏறி சொன்னார்கள்.

(‘‘ஹத் ஹேகை ஜீட் கீ.... பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமா? இந்த கடாயை என் வாழ்க்கையில் இன்றுதான் முதல் தடவை பார்த்தேன்.’’)

கடைசியாக சாட்சி கூண்டில் நின்று, முதலில் இருந்து கடைசி வரை நடந்த விஷயத்தை தன் கண்ணால் பார்த்த மாதிரி இன்ஸ்பெக்டர் சொன்னான்.

(‘‘கதை முக்கால்வாசி பொய்தான். தலை ஒண்ணும் எரியவில்லை. அந்த கசாப்பு கத்திகளும் மண்டை ஓட்டையும் ஒளித்து வைத்த இடம் எனக்குதான் தெரியும். தீர்ப்பு சரியாக இல்லை என்றால் நடத்திய வழக்கெல்லாம் பொய் என்ற ஆதாரம் என்னிடம் இருக்கு.’’)

தினமும் வழக்கு நடந்ததினால் ஆர்கியூமென்ட் ஸ்டேஜுக்கு சீக்கிரம் நெருங்கி விட்டது. அஸ்லம்கானுக்கும் அவன் வைத்த வழக்கறிஞர்களுக்கும் கேசில் இருந்து சீக்கிரம் விடுதலை ஆகி விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. தீர்ப்பு வழங்க நீதிபதி ஒரு வாரம் எடுத்தார்.

தீர்ப்பு.... இரண்டு ஆயுள் தண்டனைகள், பிணத்தை வெடியதற்கு ஏழு வருடம், தலையை அடையாளம் தெரியாத அளவுக்கு வறுத்ததினால் ஒரு ஏழு வருடம்.

நான் சொல்ல சொல்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பொறுமையாக இந்த கதையை எழுதிக் கொண்டு இருக்கும் சரவணன் கூறினான்.

‘‘அப்போ அந்த பாய் எக்கசக்கமா மாட்டிவிட்டான். தலையும் கத்தியும் பத்தி சொல்ல முடியாம மாட்டி கொண்டு இருக்கிறான். சொன்னால் இன்னும் ஒரு லைப் கொடுத்துவிடுவார்கள்.’’