சனி, 21 மார்ச், 2009

"ஜெய‌ல‌லிதாவை வ‌ச்சிருந்த‌ அறை எங்கிருக்கு"ஸ்டாலின் சிறை விசிட் கலகல‌

"சம்பவம் நடந்து சில நாலாச்சே இப்ப லேட்டா வந்திருக்கிறீயே.." என்று யாரும் மனசுக்குள் திட்ட வேண்டாம். சம்பவம் நடந்த அன்றைய தினமே பதிவை போட்டேன். கணிப்பொறி கோளாறா? இல்லை வேறு எதாவது காரணமா தெரியவில்லை பதிவு காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் அரங்கேற்றுகிறேன்.

எத்தனையோ வரலாறுகளை படைத்த‌ சென்னை மத்திய சிறைச்சாலை இப்போது சுற்றுலா சாலையாக மாறிவிட்டது. மிசாவில் சிறைபட்ட அமைச்சர் ஸ்டாலின் இந்த சிறைக்கு திடீரென்று குடும்பத்துடன் விசிட் அடித்ததுதான் ஆச்சரியம்.

மானைவி துர்கா, மகன் உதயநிதி மகள் மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா, மருமகன் சபரீசன், பேரன் இன்பா, மறைந்த முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன், தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் மகன் கரன், மகள் திவ்யா, மு.க.தமிழரசன் மகன் அருள் தமிழரசு, செல்வத்தின் மகள் எழிலரசி, என மொத்த குடும்பமும் பிக்னிக் போவது போல கிளம்பி வந்தார்கள். ஸ்டாலின் அடைக்கப்பட்ட சிறையை பார்க்க வேண்டும் என்பது மனைவி துர்காவின் ஆசையாம்.

ஸ்டாலினின் திடீர் விசிட் கேள்விபட்டு காக்கிகள் விரைப்போடு ஜெயிலில் ஆஜர் ஆகியிருந்தார்கள். சிறையை பார்க்க வந்தவர்களை எல்லாம் ‘‘பொறியாளர்கள் அளவு எடுத்துக்கிட்டு இருக்காங்க.. இன்னைக்கு பார்க்க முடியாது நாளைக்கு வாங்க..’’ என்று ஸ்டாலினுக்காக பொய்யை சொல்லி, பார்வையாளர்கள் திருப்பி அனுப்பி கொண்டிருந்தனர். இந்த விஷயம் ஸ்டாலின் காதுக்கு போக, ‘பொதுமக்கள் யாரையும் தடுக்க வேண்டாம்’ என்று அவர் அலுவலகத்தில் இருந்தே தகவல் பறந்து வந்தது. பொது மக்களோடு மக்களாக தம் மக்களையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் ஸ்டாலின்.

பிரமாண்டமான கேட்டை தாண்டி அவர் உள்ளே வந்தபோது அதன் பக்கத்தில் இருந்த அறையை காட்டி ‘‘இதுதான் ஜெயிலர் அறை. இங்குதான் முதன்முதலில் வரும் கைதிகளுக்கு இன்டர்வியூ நடக்கும்... மிசாவில் வந்த போது எனக்கும் இங்குதான் நேர்காணல் நடந்தது’’ என்று சொல்ல, ‘‘இந்த இடம் வரைக்கும் உங்களையும் மாமாவையும் (கருணாநிதி) பார்க்க வந்திருக்கேன்’’ என்று ஞாபகங்களை கிளறிப்போட்டார் ஸ்டாலின் மனைவி துர்கா. ஜெயிலர் அறையை தாண்டி செக்யூரிட்டி பிளாக் 1ல் இருந்த ஆறாவது செல்லுக்குள் நுழைந்தார் ஸ்டாலின். ‘‘மிசாவுல என்னை கைது செய்தவுடன் இங்கேதான் முதலில் அடச்சாங்க..’’ என்று ஸ்டாலின் சொல்ல, அவர் குடும்பத்தினர் எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ‘‘தலைவர்கூட (கருணாநிதி) இந்த அறைக்கு பக்கத்துலதான் ஒரு சமயம் கைது பண்ணி அடைச்சாங்க...’’ என்று ஸ்டாலின் சொல்ல பக்கத்தில் இருந்த அறைக்கு மொத்த டீமும் போனது.

‘‘இங்கேதான் 63ல் அண்ணாவையும் 86ல் தலைவரையும் 84ல் பிரபாகரனும் அடைக்கப்பட்டிருந்தார்கள்’’ என்று ஸ்டாலினுடன் வந்த அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்ணதாசன்தான் சொல்ல, ‘‘ஓ.. அண்ணா இருந்த அறையிலதானா மாமாவை அடைச்சாங்க.. ரொம்ப ஆச்சரியமா இருக்கே’’ என்று துர்கா வியந்து போனார். தன் மகன் உதயநிதியிடம் ‘நீ குழந்தையா இருந்தபோது தாத்தாவை பார்க்க இங்கே அழைச்சிட்டு வந்தேன்.’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் துர்கா. ‘‘பிரபாகரன் கூட இங்கேதான் இருந்தாரா?’’ ஏன் எதற்கு என்று கேள்விகளை கேட்டு மற்றவர்கள் வியப்பு கூட்டினார்கள். ‘‘நான் இருந்ததே சுபாஷ் சந்திரபோஸ் இருந்த அறைதான்’’ என்று ஸ்டாலின் சொல்ல துர்கா முகத்தில் பெருமிதம்.

‘‘ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேச முடியாத அளவுக்கு அறைகள் இருக்கே’’ என்று துர்கா கேட்க, ‘‘சாப்பாடு டைமுக்கு மட்டும்தான் அறையை திறப்பாங்க... மத்த நேரம் எல்லாம் ஜெயிலுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும்.’’ என்று சொல்லியபடியே நடந்தார் ஸ்டாலின். ‘‘மாமா, டாய்லெட் எல்லாம் உள்ளேயே இருக்குமா?’’ என்று தயாநிதி மாறன் கேட்க, ‘‘இப்ப அறைக்குள்ளேயே இருக்கிற டாய்லெட் எல்லாம் தலைவர் ஆட்சியில இருந்த போது செய்த வசதிகள்... நான் இருந்த போது சட்டி ஒன்ன கொடுப்பாங்க.. அதுலதான் டாய்லெட் எல்லாம் போக வேண்டும்’’ என்று ஸ்டாலின் சொன்ன போது எல்லோருடைய முகமும் மாறியது.

காமிராவோடு வந்த உதயநிதி, சிறை காட்சிகளை காமிராவில் சிறைபிடித்தபடியே வந்தார். அந்த காமிராவை கேட்டு அவருடை குட்டி பையன் அடம்பிடிக்க அவன் கழுத்தில் காமிராவை மாட்டிவிட்டார். கோணம் எதுவும் பார்க்காமல் சகட்டுமேனிக்கு கிளிக்கி கொண்டே இருந்தான் இன்பா. சுற்றுலாவுக்கு திறந்துவிட்டதால் வந்த பார்வையாளர்களோ அல்லது ஏற்கனவே இங்கே சிறைப்பட்டிருந்த கைதிகளோ ஒவ்வொரு அறையில் கரித்துண்டால் ஆங்காங்கே கிறுக்கி வைத்திருந்தார்கள். ஒரு சில கவிதைகளாகவும் இருந்தன. அதை ரசித்துபடித்தனர். வந்த வி.ஐ.பி.களுக்கு தர்மசங்கடம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ‘‘சுவற்றில் அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் எழுதி வச்சிருக்காங்க’’ சொல்லி சிக்னல் கொடுத்தார் கூட வந்த ஒருவர்.

‘வெட்டிபய ஜீவா... கொடுவா முருகன்... அறுவா ஆறுமுகம்... பாம் சேகர்...’ என்று அடைமொழியோடு ரவுடிகளின் பெயர்கள் சுவரில் கரியால் எழுதபட்டிருந்தது. ‘‘பெரிய பெரிய தாதாக்களாக இருப்பார்கள் போல’’ என்று சொல்லியபடியே அதையும் போட்டோவுக்குள் அடக்கினார்கள். இதை பார்த்த தயாநிதி மாறன் ‘‘கைதிகள் ஜெயிலை சுத்தமாதான் வச்சிருந்தாங்க.. விசிட்டர்கள் இப்படி கிறுக்கி அசிங்கப்படுத்தியிருக்காங்க’’ என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

‘‘தூக்குமேடை எல்லாம் எங்கே இருக்கு..’’ என்று ஆர்வமாக கேட்டார் உதயநிதி மனைவி கிருத்திகா. ‘‘அது அந்த பக்கம் இருக்கும் மேடம்’’ என்று அதிகாரிகள் விளக்கம் கொடுத்தார்கள். ‘‘ஏய் நீ அந்தமான் போனப்ப அங்கே இருந்த ஜெயில்ல பாக்கலையா. அங்கே இருந்தது மாதிரிதான் இங்கேயும் இருக்கு.?’’ என்று கிருத்திகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மல்லிகா மாறன். ஜெயில் விசிட் காட்சிகளையும் கிருத்திகாவும் போட்டோ எடுத்து தள்ளினார். ‘‘ஜெயலலிதாவை எங்கே வச்சிருந்தாங்க.. அந்த இடம் எங்கே இருக்கு?’’ என்று ஆர்வமாக கேட்டார் துர்கா. அடுத்த ஸ்பாட் அந்த ஏரியாதான். ‘முக்கிய பிரமுகர்கள் தொகுதி’ என்று எழுதபட்ட ஏரியாவுக்குள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஓடுகளோடு சின்ன குடில்கள் போல இருந்தன வி.ஐ.பி.கள் அடைக்கப்படும் அறைகள். ‘‘96ல கலர் டி.வி. ஊழல் வழக்குல இங்கேதான் ஜெயலலிதாவை அடைச்சி வச்சிருந்தாங்க’’ என்று அதிகாரிகள் பாடம் படிக்க, ‘‘நல்லா ஓப்பனா காற்றோட்டத்தோட இருக்கே..’’ என்று சொன்ன துர்கா, ‘‘சசிகலாவையும் ஜெயலலிதாவை தனித்தனியாதான் அடைச்சி வச்சாங்களா?’’ என்று கேள்வியை போட்டார். ‘‘பக்கத்து பக்கத்து அறையிலதான் இருந்தாங்க..’’ என்று சொல்ல சிரித்தபடியே அடுத்த இடத்திற்கு நுழைந்தார்கள்.

அந்த இடம். 2001ம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடம். அங்கேயும் குடில் போல வீடு. அதில் இருந்த அறைக்குள் மொத்த குடும்பமும் போய் நின்று கண்களை சுழலவிட்டு ஆச்சரியத்தோடு பார்த்தது. ‘‘தாத்தாவை இங்கேயா வச்சிருந்தாங்க..’ என்று கேட்டு மகன் இன்பாவிடமிருந்து காமிராவை வாங்கி மொத்த குடும்பத்தையும் அந்த அறையில் இருந்தபடியே படம் எடுத்தார் உதயநிதி காமிராவை வைத்திருந்த இன்பாவிடம் படம் எடுக்க காமிராவை உதயநிதி கேட்க, அவன் முரண்டுபிடித்தபடியே நின்றான். ‘‘ஏய் தத்தாவை இந்த அறையிலதான் அடைச்சி வச்சிருந்தாங்.. படம் எடுக்கலாம்’’ என்று சொல்ல, காமிராவை பவ்யமாக நீட்டினான் அப்பாவிடம்.


தயாநிதி மாறனின் பிள்ளைகள் கரன், திவ்யா படுசுட்டி. சிறை வளாகத்திற்குள் அங்குமிங்கும் ஓடியபடியே இருந்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்த படாதபாடு பட்டார் தயாநிதி மாறன். திவ்யா செல்போனில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தாள். குருப் போட்டோ எடுத்த சமயத்தில் திவ்யா செல்போனில் பேசிக்கொண்டே இருக்க, மல்லிகா மாறன் கொஞ்சம் அதட்டல் போட்டார். ‘‘ஓடாதீங்க ஓடுனா ஜெயில்ல போட சொல்லிடுவிடுவேன்.’’ என்று சொல்லி அவர்களை மிரட்டிபார்த்தார் தயாநிதி . அவர்கள் எதற்கும் அசையவில்லை.

கைதிகள் வேலை செய்யும் இடத்தையும் அதன் பக்கத்தில் இருந்த தியான மண்டபத்தையும் பார்த்தார்கள். அதன்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தை காட்டி ‘‘இங்கே இருந்துதான் ஆட்டோ சங்கர் தப்பிச்சு போனான்.’’ என்று அதிகாரிகள் சொல்ல ‘‘அப்படியா’’ என்று ஆச்சரியத்தோடு அந்த இடத்தை பார்த்தபடியே நகர்ந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக ரொம்ப கலகலப்பாக இருந்தார் ஸ்டாலின். பத்திரிகை போட்டோகிராபர்கள் எல்லாம் அங்கே குவிந்ததை பார்த்த ஸ்டாலின் ‘‘ஜெயிலை குடும்பத்தோடு பார்க்க வந்திருக்கிறேன். சிரமம் கொடுக்காதீங்க..’’ என்று ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் போக போக அவர்களோடும் சகஜமாகிவிட்டார். ஒவ்வொரு இடத்தை சுட்டிக்காட்டி விளக்கம் கொடுத்தபடியே ஸ்டாலின் வந்து சேர்ந்த இடம் மிக முக்கியமான இடம். மிசாவில் ஸ்டாலின் அடைக்கப்பட்ட பிளாக்.

‘‘இந்த இடத்துக்கு ‘டவர் பிளாக்’னு என்று பேரு. ஜெயில் பாஷையில சொன்னா... டவர் பிளாக்கு கைதியை கொண்டு போறாங்கனா அடிச்சு நொறுக்க போறாங்கனு அர்த்தம்.’’ என்று தன் மகன் உதயநிதியிடம் விளக்க கொடுத்தபடியே நடந்தார் ஸ்டாலின். மிசாவில் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த 9வது பிளாக்குள் சிரித்தபடியே ஸ்டாலின் போக பின்னால் குடும்பத்தினர் அணிவகுத்தனர். பல ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், தான் இருந்த அறையை சரியாக ஞாபக் வைத்திருந்தார். கொஞ்சம்கூட சிரமபடாமல் தன்னை அடைத்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்தார்.

‘‘இங்கேதான் நான் ரொம்ப நாளா அடைக்கப்பட்டிருந்தேன்’’ என்று சொல்லி தனது குடும்பத்தினருக்கு அறையை அடையாளம் காட்டினார். ‘‘இங்குதான் என்னை இரண்டு நாளா வச்சு அடிச்சாங்க..’’ என்று அவர் சிரித்தபடியே சொல்ல மொத்த குடும்பமும் அப்போது நடந்த செய்திகளை மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தது. ‘‘ஆமா சிட்டிபாபு டைரி குறிப்பில் எழுதியிருக்காரு.. அதைக்கூட நான் படிச்சிருக்கேன்’’ என்று துர்காவிடம் இருந்து பதில் வந்தது. ‘‘நான் இங்கே இருந்த போது லட்சுமிகாந்தனு ஒரு கைதி பக்கத்துல அடைக்கப்பட்டிருந்தார். சிறை கம்பியை பிடித்துக்கொண்டு ‘வசந்தா வசந்தா’னு தன் பொண்டாட்டி பெயரை சொல்லி அழுதுகிட்டே இருப்பாரு’’ என்று பழைய நினைவுகளை சொன்னார். ‘‘ரத்த கறை படிஞ்ச பஞ்சு துணிகள் எல்லாம் இந்த இடத்துல காலையில் கிடக்கும். மிசாவுல அடைக்கப்பட்டவங்களுக்கு நடந்த கொடுமைகளின் சுவடுகள் அது’’ என்று கரகரத்த குரலில் சொன்னார்.

ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் மொத்த குடும்பமும் நுழைந்தது. ‘‘இரண்டு நிமிஷத்துக்கு மேல உள்ளே இருக்க முடியல.. இப்படி அவியுது.. எப்படி மாமா இருந்தீங்க...’’ என்று தயாநிதி கேட்க ஸ்டாலினிடம் புன்னகைதான் பதிலாக இருந்தது. அந்த அறையில் தனியாக ஸ்டாலின் மட்டும் கம்பிகளை பிடித்தபடியே படம் எடுத்துக்கொண்டார். உடனே பேரன் இன்பா ‘‘தாத்தா நான் படம் எடுக்குறேன்... நீ உள்ளே நில்லுங்க’’ என்று சொல்லிபடியே போட்டோ எடுத்தான். பேரன் போட்டோ எடுத்த போது ஸ்டாலின் முகத்தில் ஏகத்துக்கு சிரிப்பு. கம்பிகளை பிடித்தபடியே ‘‘உதயா நீயும் வந்து படம் எடுத்துக்கோ’’ என்று ஸ்டாலின் சொல்ல, அதையும் விடாமல் போட்டோ எடுத்தான் இன்பா. இன்பாவை அறைக்குள் அழைத்த ஸ்டாலின் அவனோடு சரிசமமாக உட்கார்ந்து போஸ் கொடுத்தார். இதை படம் பிடித்தது உதயநிதி.

மருத்துவமனை இருந்த ஏரியாவுக்கு போனார்கள். ‘‘இந்த ஆஸ்பிட்டல்ல நான் இரண்டு நாள் இருந்திருக்கேன்’’ என்று மருமகள் கிருத்திகாவிடம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் ஸ்டாலின். அதற்கு அடுத்த இடத்தில் ‘கன்டம் அறை’. என்று எழுதப்பட்ட கட்டடம் இருந்தது. ‘‘ரொம்ப கொடூரமான கைதிகளை இங்கே டிரஸ் இல்லாம அடைச்சி வைப்பாங்க’’ என்று அதிகாரிகளிடமிருந்து விளக்கம் வந்தது. ‘‘இங்கே ஒரு நைட் இருந்தா போது கைதிங்க திருந்திடுவாங்க.... நீங்க இரண்டு நாள் இருந்து பாத்துட்டு வாயேன்’’ என்று மு.க. தமிழரசு மகன் அருள் தமிழரசிடம் ஜோக்கடித்தார் தயாநிதி. அதற்கு அடுத்த பகுதிக்கு ஸ்டாலின் போக ‘அது எச்.ஐ.வி. கைதிகள் இருந்த பகுதி அங்கே போக வேண்டாம்’’ என்று அவரை தடுத்து வேறு பக்கம் அழைத்து போனார்கள் அதிகாரிகள்.

சமையல் கூடம் இருந்த பகுதிக்கு போனபோது ‘சாப்பிடலாம் வாங்க... சாப்பிட்டால் பேதி ஆகும் போங்க’ என்று குறும்புகார கைதி யாரோ சுவற்றில் கிறுக்கியிருந்ததை ஸ்டாலின் குடும்பத்தினர் ரொம்பவே ரசித்தனர். அதையும் விட்டு வைக்காமல் போட்டோ எடுத்தார்கள். சிறையை பார்வையிட வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த டில்லி அம்மாள், துர்காவிடம் ‘‘ரேஷன் கடையில் என் கார்டுக்கு என் பொண்ணு போய் கேட்ட பொருள் தரமாட்டேங்குறாங்கம்மா.. நீங்க எதாச்சும் உதவுங்கம்மா’’ என்று கேட்க ‘‘பெயர் விவரம் எல்லாம் எழுதிக்கொடுங்க. கண்டிப்பா நடவடிக்கை எடுக்க சொல்லுறேன்’’ என்றார் துர்கா. உடனே அவர் விவரங்களை எழுதிக்கொடுத்தார். அதில் அவர் பெயர் இல்லை. ‘‘இப்படி பெயர் எழுதவே பயந்தா எப்படி? எதையும் தைரியமா தட்டி கேட்கவேண்டும்’’ என்று மல்லிகா மாறன் சொல்ல, ‘‘எதாவது தொந்தரவு வரும்னு பயப்படுறாங்க போல...’’ என்று துர்கா சொல்ல், ‘‘நீங்க இவ்வளவு சொன்ன பிறகும் எப்படிம்மா’’ என்று தனது பெயரையும் எழுதிக்கொடுத்தார். ‘‘ம் இப்படிதான் பெண்கள் எல்லாம் தைரியமாக இருக்க வேண்டும்:’’ என்று சொல்லி கிளம்பினார் துர்கா.
வெளியே வந்த போது பிரமாண்ட கேட்டின் சிறிய கதவை திறந்தபடியே வெளியே வந்தார் ஸ்டாலின். அவருக்கு பின்னால் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்த போது ‘‘ஜெயிலுக்கு போயிட்டு ரிலீஸ் ஆகி வெளியே வர்றீங்களா?’’ என்று கிண்டலடித்தார் . தமிழரசு மகனை கேட்டில் இருந்து வருவது போல உதயநிதி படம் எடுக்க, ‘‘ஏம்பா இன்னைக்கு போயிட்டு இன்னைக்கே நீ ரிலிஸ் ஆயிட்டீயா’’ என்று லந்து பண்ணினார் தயாநிதி. நள்ளிரவில் ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யபட்டு இங்கே கொண்டு வந்த போது இந்த கேட்டின் முன்பு அமர்ந்துதான் கருணாநிதி போராட்டம் நடத்தினார். நினைவுகளை ஞாபகப்படுத்தினார் மல்லிகா மாறன்.

ஜெயிலுக்கு வந்தவர்கள் எல்லாம் ஸ்டாலினிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அவரும் சளைக்காமல் கையெழுத்து போட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக தயாநிதி மாறனிடமும் கையெழுத்து வாங்க பலரும் தவறவில்லை.